தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கும் மூன்று கிலோமீட்டர் அருகில் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. நகரத்தார்களின் கோத்திரமான ஒன்பது நகரத்தார் கோயில்களும் பிள்ளையார்பட்டியும் ஒன்றாகும். பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் ஒரு குடைவரை கோயிலாகும். குன்றைக் குடைந்து ஒரு கோயிலையும், ஸ்ரீ கற்பக விநாயகர் சிற்பத்தையும், ஶ்ரீதிருவீசர் என்னும் லிங்கத்தையும் வடிவமைத்துள்ளனர். முற்கால பாண்டியர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் குடைவரை திருக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுக்கள் திருக்கோயிலில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகளில் எக்காட்டூர் திருவீங்கைக்குடி, மருதங்குடி, இராச நாராயணபுரம் ஆகிய பெயர்களை இந்த ஊரின் பழங்கால பெயர்களாக குறிக்கப்பட்டுள்ளன.கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன. கி.பி 1284 முதல் இத்திருக்கோயில் நகரத்தார்களுக்கு உரிமையாயிற்று. இதற்கான கல்வெட்டுச் சான்று திருவீசர் கருவறை திருவாயிலுக்கு வலது பக்க சுவரில் உள்ளது. கற்பக மரம் போல கேட்ட வரம் அனைத்தும் நல்குவதால் கற்பக விநாயகர் என்ற பெயர் பிற்காலத்தில் காரணப்பெயராக அமைந்தது. தேசிய விநாயகம் பிள்ளையார் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது. உலகின் பல பாகங்களில் விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு வளர்ந்து வருகிறது. உலகில் காணப்படும் விநாயகர் சிற்பங்கள் காலத்தில் முந்தையதாகவும், உலகத்தின் முதல் பிள்ளையாகவும், அமைந்திருப்பது கற்பக விநாயகரின் சிற்பமே ஆகும்.
உலகில் இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் அதிகமான பிற்கால அணிகலன்களுடன் காணப்படுகிறது. பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் சிற்பத்தில் இரண்டு கைகள் மட்டுமே இருப்பது தனிப்பெரும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தைக் கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணர் பெருந்தச்சன் என்ற அவரது கையெழுத்து கி.மு நான்காம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த தமிழ் வரிவடிவ எழுத்தில் உள்ளது. எனவே சிற்பத்தை வடிவமைத்த காலம் சற்று ஏறக்குறைய கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என கொள்ளலாம். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும் நமது கல்வெட்டுகளின் சான்று ஆதாரங்களின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்திற்கு முதன்முதல் பிள்ளையார் வடிவம் என அறியலாம். கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் ( தியானம் செய்யும்) திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.
விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்தது. வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே வலம்புரி விநாயகரை வணங்குபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான். திருமண பேரு நல்கும் காத்தாயினி, பிள்ளை பேறு தரும் அதிசயனங்கம், செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு ஆகியன இத்தளத்தின் சிறப்பாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகப்பெரியது விநாயகர் சதுர்த்தி திருவிழாவே ஆகும். விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி, குடியேற்றம் செய்து, இவ்விழாவைத் தொடங்குவார்கள். பத்து நாட்கள் இத்திருவிழா கோலாக்கலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணா நோன்பு இருந்து, அதனை நிறைவு செய்யும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி வருவார்கள். விநாயகர் சதுர்த்தி திருநாளன்று கற்பக விநாயகர் சன்னதியில் உண்ணா நோன்பு இருந்து கும்ப ஜபத்தில் கலந்துகொண்டு அந்த கும்பத்தைப் பெற்று மன கோயிலில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்வதாக மனதிற்குள் பாவித்து கும்பநீரில் குளிப்பார்கள். ஓராண்டு சதுர்த்தி உண்ணா நோன்பு விரதத்தை இங்கு பூர்த்தி செய்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கின்றன என்பது கண் கண்ட உண்மையை ஆகும்.