அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

சிறப்புகள்
/ /

உலகம் யாவையும் படைத்து காத்துத் துடைக்கும் முழு முதல் இறைவன் ஒருவனே. அவனை இப்படியன், இத்தன்மையன், இந்நிறத்தன் என்று தம் போன்றவர்கள் எளிதில் உணர மாட்டோம். ஆனாலும் உண்மை உணர்ந்த, அருள்பழுத்த நெஞ்சினர்கள் அவனுக்கு அவன் அருளாலே ஆயிரம் ஆயிரம் திருப்பெயரையும், திரு உருவத்தையும், தந்து நாம் உய்ய வழி வகுத்து அருளியிருக்கிறார்கள்.

திருஉருவ அமைதிகளைப் புலப்படுத்த தியான ஸ்லோகங்கள் இருப்பதைப் போலவே அவன் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் பல உள. வேறு வேறு உருவத்தை மனதில் கொண்டு பல பாவனைகளில் அந்த ஒருவனை வழிபடுவதால் மந்திரங்களும் பல ஆயின. எனினும் எல்லா மந்திரங்களும் பிரணவ கோஷமாகிய "ஓம்" ஒலியை மூலமாகக் கொண்டே ஓதப் பெறுகின்றன. அவ்வாறு எந்த மூர்த்ததைப் பூசித்தாலும் பிரணவப் பொருளாகிய பிள்ளையாரை முதலில் வணங்கி மேற்செல்வதே நமது மரபு, விதியும் கூட.

பிள்ளையார், மூத்ததிருப் பிள்ளையார், கணபதி, கணேசன், கணநாதன், விநாயகன், விக்கின விநாயகன், விக்கின ராஜன், விக்கினேஸ்வரன், கஜமுகன், கரிமுகன், யானைமுகன், வேழமுகன், தும்பிக்கையான், அத்திமுகன், ஐங்கரன், அங்குசபாசன், முன்னவன், ஓங்காரன், பிரணவப் பொருள், கற்பகமூர்த்தி, கற்பக விநாயகன், கற்பகப் பிள்ளையார் முதலான பல பொதுப் பெயர்களைக் கொண்டருளும் பெருமான் இடங்களுக்குத் தக்கபடி பலப் பல காரணங்களாக சிறப்பு பெயர்கள் பலவற்றைத் தாங்கி அருள்வதே நாம் நன்கறிவோம்.

இந்த மூர்த்தத்தின் உருவ தத்துவத்தைச் நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தோமேயானால் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதி தேவதை என்பர் நூலோர். யானைத் தலையே அதற்கு சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரி வடிவமான "ஓம்" என்பதைக் கட்புலனாகும்படி காட்ட யானைத் தலையே பெரிதும் ஏற்றதாய் இருக்கிறது. வலப்புறத் தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்படுவதன் மூலம் ஓ என்ற எழுத்தில் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடது காதுவரைச் சென்று, வளைந்த இடத்தந்தத்தின் வழியாகக் கீழ்நோக்கித் துதிக்கை நுனிவிரல் கோடிட்டால் ஓ என்ற வரிவடிவம் தோன்றுவிடக் காண்போம். கையில் உள்ள மோதகம் ' ம் ' என்ற வரிவடிவத்தைச் சுட்டுகிறது. பிள்ளையார்பட்டிப் பெருமாள் வலம்புரிப் பிள்ளையார் ஆகியிருப்பதால், பெரும்பாலாக மற்ற இடங்களில் உள்ள மூர்த்தங்களைவிட விளக்கமாக இவ்வுண்மையை (ஓம்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிள்ளையார்பட்டி விநாயகரின் சிறப்பியல்புகள்:

இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது.

சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப் போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களைக் கொண்டு விளங்குவது.

அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.

வயிறு ஆசனத்தில் படியாமல் ' அர்த்தபத்ம ' ஆசனம் போன்று கால்கள் மடிந்திருக்க அமர்ந்த அருளுவது.

இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.

வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்வது.

ஆண், பெண் இணைப்பைப் புலப்படுத்தும் முறையில் வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவது.

ஆகியவை பிள்ளையார்பட்டிப் பெருமானிடம் காணப்பெறும் சிறப்பு அமைதிகள்.

விநாயகன் என்ற சொல்லுக்கு, ஒப்பு உயர்வு இல்லாத தலைவன் " தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேலிலான் " என்பது பொருளாகும். அதாவது அண்ட சராசரம் அனைத்திற்கும் தானே தனித்தலைவன் என்பதாகும். அனைத்திற்கும் முதலாய் தோன்றியது நாதமே என்பதைப் பண்டைய மெய் ஞானிகள் போன்றே இன்றைய விஞ்ஞானிகளும் நம்புகின்றனர். நாத தத்துவத்திற்கே ஆதாரச் சொல் அல்லது மூல ஒலி " ஓம் " என்பதாகும். அந்த ஒலிக்கு முற்றறிவு உடைய நமது பெரியோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னையே உலகம் போன்ற வரிவடிவை அற்புதமாக அமைத்தனர். அந்த வரிவடிவத்தை மனதில் கொண்டு அமைக்கப்பெற்றதே இந்த உருவடிவம். பரம்பொருள்களிலிருந்து முதலில் வெளிப்பட்டது ஒலி. அந்த ஒலி(பிரணவ) உருவுடன் விளங்குவதால் பிள்ளையார், மூத்ததிருப் பிள்ளையார் ஓங்கார பெருமான், பிரணவ சொரூபி என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

சகல கணங்களுக்கும் தலைவனாய் விளங்கும் உண்மையை உணர்த்த கணபதி, கணேசன், கணநாதன் முதலிய திருப்பெயர்களைத் தாங்கி அருளுகிறார்.

தம்மை உணர்ந்த பணிந்தோருக்கு இடையூறுகளை நீக்கியும், அல்லாதவருக்கு ஆக்கியும் அருள் சுரப்பதால் விக்னேஸ்வரன், விக்கினராஜன், விக்கின விநாயகன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது. அவருடைய பெருவயிறு (லம்போதரகம்) சர்வ அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் பெருமையையும், மோதகம் ஏந்தும் கரம் அகிலத்தை தாங்கி பாதுகாக்கும் அருமையையும் உணர்த்துவன.

நெற்றிக்கண், கங்கை, சடைமுடி, இளம்பிறை, இண்டை முதலான சிவனுக்குரிய அங்கங்கள் அனைத்தையும் பிள்ளையாருக்கும் உரியதாகப் பேசுவது தொன்று தொட்ட மரபு. இதிலிருந்து சிவன் வேறு, பிள்ளையார் வேறு என்று சொல்ல முடியாத அபேத உண்மை நன்கு புலப்படுகிறது. அன்றியும் பிரமன், திருமால் ஆகிய கடவுளுக்குரிய குண்டிகை, சங்கு, சக்கரம் முதலியவும் பிள்ளையாருக்கும் உரியவனாக நூல்கள் கூறும்.

முருகன், குமரன், பாலன், என்ற பெயர்களில் மிக்க இளமையை உணர்த்தவும், பெருமானுடைய பால் வேறுபாடு அற்ற குழந்தை தன்மையை உணர்த்தவும் பிள்ளையார் (குழந்தை )என்ற பெயரால் விநாயகப் பெருமானை உலகம் உரைத்து மகிழ்கிறது. விநாயகப் பிரபாவம் அதாவது பிள்ளையார் பெருமை பேச அரியதாகும். எனவே பேச்சிறந்த பூரணமாம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளுக்கு பாத்திரமாக உயர்வோம்.